×

சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

நாகை, அக்.27: நாகை சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை (28ம் தேதி) தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிக்கல் சிங்காரவேலவர் கோயில். கந்த சஷ்டி விழாவின் போது சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை வேறு எங்கும் காண முடியாது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நாளை(28ம் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று (27ம் தேதி) கணபதி ஹோமம், சுந்தர கணபதிக்கு அபிஷேக ஆராதனை ஆகியவை நடக்கிறது.

நாளை மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிங்காரவேலவர் தங்க மஞ்சத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29ம் தேதி காலை நாகாபரண காட்சியும், இரவு பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. 30ம் தேதி காலை மோகனாவதார காட்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. 31ம் தேதி காலை வேணுகோபால அவதார காட்சியும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. 1ம் தேதி காலை திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு திருத்தேரில் இருந்து சிங்காரவேலவர் கோயிலுக்குள் எழுந்தருளி சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், வியர்வை சிந்தும் அற்புத காட்சியும், சக்திவேல் வாங்கும் சிறப்பு நாதஸ்வரம் ஆகியவும் நடக்கிறது. 2ம் தேதி காலை ஆறுமுக பெருமானுக்கு சண்முகார்ச்சனை நடைபெறும். மதியம் சஷ்டி மகாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சம்ஹாரம் மற்றும் இந்திர விமானத்தில் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து மாபெரும் வாணவேடிக்கை நடைபெறுகிறது. 3ம் தேதி தீர்த்தவாரியும், தெய்வசேனை திருக்கல்யாணமும், 4ம் தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 5ம் தேதி சயனதிருக்காட்சி மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினந்தோறும் மாலை சுவாமி திருவீதியுலாவும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Tags : Kanda Sashti Festival ,Chikka Singaravelavar Temple ,
× RELATED திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா...